போலி நாணயத் தாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து6 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று பொன்னாலைச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் காரைநகரில் இருந்து வந்தபோதே இடைமறிக்கப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா நோட்டுக்கள் 21, ஒரு ஆயிரம் ரூபா நோட்டு என்பன கைப்பற்றப்பட்டன. அவை போலி போலி நாணயத் தாள்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் நல்லூரில் உள்ள வீடொன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அந்த வீட்டில் வைத்தே போலி நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. நாணயத் தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட பிரிண்ரர், ஸ்கானர், கணினி, வெட்டும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நல்லூர் மற்றும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் 31 மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் முன்னர் இரு வேறு குற்றங்களுக்காக சிறைக்குச் சென்றவர்கள் என்றும், அங்கு ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் பின்னர் இணைந்து போலி நாணயத் தாள்களை அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.