புதிய அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது! வாசுதேவ!

புதிய அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது என தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கமே தொடரும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பது அநாவசியமானது எனவும் அவர் கூறினார்.

இன்று அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றம் அரசியலமைப்பிற்கு இணங்கவும், அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு இணங்கவுமே செயற்படும். எனவே அரசாங்கம் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தை எந்தவொரு கட்சியும் எடுக்க முடியாது என கூறினார்.

மேலும் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்கான ஒழுங்கு பத்திரம் தயாரிக்கப்படும் என்றும் அதன்படியே அன்றைய அமர்வுகள் இடம்பெறும் என்றும் இதனை சபாநாயகரே தீர்மானிப்பார் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.