மக்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர்ந்து போராட வேண்டும்: ரணில் கோரிக்கை

ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) விசேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரணில், தொடர்ந்து போராடினால் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு ஆட்சி செல்வதைத் தடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டில் ஜனநாயகம் பணயக் கைதியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. இந்த இருள் சூழ்ந்த கடுமையான நாட்களில் நீங்கள் ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டீர்கள்.

நீங்கள் தானாகேவே முன்வந்து வீதியில் இறங்கி அன்று முதல் இன்று வரை பாரிய மக்கள் சக்தியைக் வெளிப்படுத்துகின்றீர்கள். அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு தைரியமாகவும், ஆசீர்வாதத்துடனும் போராடும் நீங்கள் இந்த நாட்டை மீண்டும் ஊழல் மற்றும் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு செல்வதைத் தடுத்துள்ளீர்கள்.

நீங்கள் ஜனநாயகம், உரிமைக்காக எந்த நேரத்திலும், போராடுவதற்கு எழுந்து நிற்பது குறித்து, நான் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் போராட்டத்திற்கும் அப்பால் சென்று எங்கள் சுதந்திரம், எங்கள் உரிமை, எங்கள் நாட்டிற்காக நீங்கள் போராடுகின்றீர்கள். இதனைக் கைவிடாமல் முன்னோக்கிச் செல்வோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.