ரிஷாட்டை பதற வைத்த ஒரு எம்.பி!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் பலப்பரீட்சையில் மஹிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஈடுபட்டு வரும் நிலையில், குதிரைபேரம் உச்சத்தை எட்டியுள்ளது.

தற்போதைய நிலைமையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் என்ன செய்வதென்ற அடுத்த கட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதை நேற்று வெளியாயிருந்தது.

முஸ்லிம் கட்சிகள் இரண்டையும்- முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- வளைத்துப் போட மைத்திரி- மஹிந்த தரப்பு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

தலைமைகளை பணிய வைத்த, கட்சியிலிருக்கும் எம்.பிக்களில் ஒரு பகுதியினரை உருவியெடுக்கும் உத்தியைத்தான் இதுவரை இரண்டு கட்சிகளும் கையாண்டு வந்தன.

இந்த “வரலாற்று பாடத்தில்“ இருந்து கற்றுக் கொண்ட தலைமைகள் இரண்டும், இம்முறை எம்.பிக்களை பலத்த கண்காணிப்பில் வைத்திருக்கின்றன.

மு.க எம்.பிக்கள் அனைவருமே ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதேபோல மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களும் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் மக்கள் காங்கிரஸ் ஒரு எம்.பியை கோட்டை விட்டு விட்டுவிட்டு கையை பிசைந்து கொண்டிருந்த சம்பவம் நேற்று நடந்தது.

நேற்று மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் உம்ராவிற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையில், எம்.பிக்கள் விலைபேசப்படுவதில் இருந்து தடுக்கவே இந்த ஏற்பாடு.

ஒரேயொரு ம.கா எம்.பி மாத்திரம் இந்த குழுவில் இல்லை. விமானநிலையத்திற்கு செல்லும் வரை அவரை தொடர்பும் கொள்ள முடியவில்லை.

தென்கிழக்கு பல்கலைகழக முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலே கட்சியின் தொடர்பெல்லைக்கு வெளியில் இருந்திருக்கிறார்.

முன்னர் பீடாதீபதியாக இருந்த சமயத்தில் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

அதிகார துஷ்பிரயோகம், மோசடி, ஊழல், மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

குற்றச்சாட்டுக்கள் அடங்கிய 220 பக்க ஆவணம் கோப் குழு உள்ளிட்ட 20 அரச நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.

அவர் மீதான ஒரு குற்றச்சாட்டு முன்னாள் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பதவி வகித்த சமயத்தில், அவரது பிறந்தநாளிற்கு பல்கலைகழக நிதியை பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது.

இவரை தொடர்புகொள்ள கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலர் முயன்றும் முடியவில்லை.

அந்த சமயத்தில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாஹமவின் கட்டுப்பாட்டில் எங்கோ மறைந்திருக்கலாமென கட்சி கருதுவதாக தெரிவித்தார்.

எனினும், கடைசிநேரத்தில் கட்சியை தொடர்புகொண்ட இஸ்மாயில் எம்.பி, உம்ராவில் இணைந்து கொள்வதாக கட்சிக்கு தெரிவித்துள்ளார்.