பேரம்பேச வந்தவர்களிடம் பிரதமர் பதவி கேட்டார் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி

கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக இலங்கை அரசியல் பரபரப்பாகவே காணப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் தலைவர்களின் பேரம் பேசும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில சந்தர்ப்பங்களின் யாரும் நினையாதவாறு சில பல கட்சித் தாவல்களும், ஆங்காங்கே மக்கள் கூட்டங்களும், அமைச்சுப் பதவிகளும் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது சமகால அரசியல் களம்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் பேரம் பேச சென்ற மகிந்த அணியின் ஒரு சாரார் அடித்துப்பிடித்து அலறியடித்து ஓடிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தம்மை, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரனிடம் பேரம் பேசுவதற்கென அவரது அலுவலகத்திற்கு நேரே சென்று கலந்துரையாடியுள்ளனர்.

எனினும் தமக்கு உங்களது தலைவர் பிரதமர் பதவியைத் தருவதாக இருந்தால் தாம் உங்களுக்கு ஆதரவு வழங்கத் தயார் என்றும் உங்கள் தலைவருடன் இணைந்து செயலாற்ற தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களுக்கு நான் ஆதரவு வழங்க வேண்டுமெனில் தனக்கு பிரதமர் பதவியே வேண்டும் எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட பேரம் பேச சென்ற குழுவினர் அதிர்ச்சியடைந்ததோடு, மறுவார்த்தைக்கு இடமின்றி வந்த தடம் தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

மேலும், இலங்கை அரசியல் யாப்பின் படி, நாட்டின் தலைவராக (ஜனாதிபதியாக) தெரிவுசெய்யப்படும் ஒருவர் நிச்சயமாக ஒரு பௌத்த சிங்களவராக இருக்க வேண்டும்.

எனினும் ஒரு பிரதமர் அவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.