சாவகசேரி வைத்திய சாலையிலும் நிகழ்ந்தேறிய அரசியல் குளறுபடி

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் உண்மையில் நடந்தது என்ன?அரசியல் தலையீடு காரணமாக வைத்தியர் ப.அச்சுதன் இடமாற்றப்பட்டாரா?

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் பசுபதி அச்சுதன் 01.03.2018ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக வடக்கு மாகாண ஆளுனரால் விஷேட நியமனம் மூலம் நியமிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு கேட்டுகொண்டதற்கு இணங்க வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இன் நிலையில் கடந்த 07.11.2018ம் திகதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் தயாளினி மகேந்திரன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைகளில் பணிப்பாளர் வெற்றிடமும், ஊர்காவற்துறை தள வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் வெற்றிடமும், முல்லைத்தீவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெற்றிடமும் ஏற்கனவே உள்ள போதும் ஏற்கனவே வைத்திய அத்தியட்சகர் உள்ள சுமூகமாக இயங்கிவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மத்திய சுகாதார அமைச்சினால் வைத்திய அத்தியட்சகர் நியமனம் வழங்கப்படுள்ளது. மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இய் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்ற வைத்தியர் தயாளினி மகேந்திரன் 07.11.18ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க வைத்தியசாலைக்கு சென்ற சமயம் ஏற்கனவே வைத்திய சாலையின் அத்தியட்சகராக இருந்த ப.அச்சுதன் கடமை நேரத்திற்கு முன்பாகவே வைத்தியசாலையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. எனினும் அதில் உண்மையில்லை என வைத்தியர் ப.அச்சுதன் சி.சி.ரி.வி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 4மணிக்கு வைத்தியசாலையின் அலுவலக நேரம் நிறைவடைந்த நிலையிலும் பிற்பகல் 4.17 மணிக்கே நான் வைத்திய சாலையை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறிய பின்பே வைத்தியர் தயாளினி மகேந்திரன் வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார்.

புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பிலும் அவர் கடமைகளை பொறுப்பேற்க வருவார் என்பது தொடர்பிலும் எனக்கு எதுவிதமான அறிவித்தல்களும் கிடைக்கவில்லை என்றார்.

இந் நிலையில் வைத்தியசாலை சமூகம் சார்பில் வைத்தியர் ப.அச்சுதனை தொடர்ந்தும் வைத்திய அத்தியட்சகாரக பணியாற்ற அனுமதிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சமூகம்,வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் சார்பில் 07.11.18 அன்று காலை ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஆளுனர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாகவும்,வைத்திய சாலை சமூகத்தின் கோரிக்கையினையும் காரணம் காட்டி இந்த ஆண்டு டிசம்பர் வரை வைத்தியர் ப.அச்சுதன் பணியினை தொடர அனுமதிக்குமாறும் இடமாற்றத்தை நிறுத்திவைக்குமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தனது செயாலாளர் இளங்கோவன் மூலம் கடிதம் ஊடாக பணித்துள்ளார்.

இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுனரின் பணிப்பிணையும் மீறி மீண்டும் நேற்று முன்தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக தயாளினி மகேந்திரன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே கடமையாற்றிய வைத்தியர் ப.அச்சுதன் வரணி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாக இடம்மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர் ப.அச்சுதன் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில் புதிதாக சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவினை அமைத்தமை, விபத்து சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவினை இயங்க வைப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் துரிதகதியில் ஈடுபட்டார். இந் நிலையில் இவரை இடம்மாற்றியமை வைத்தியசாலைக்கு பாதிப்பாக அமையும் என வைத்திய சாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.