மைத்திரி ஆட்டம் முடிந்து!! ரணில் ஆட்டம் விரைவில் ஆரம்பம்..

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை, நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை​யென்றார்.

25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகச் செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை என்பதுடன், நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் அவர், முதலில் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எந்தவொரு காரணத்துக்காகவும் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரிச் சேவைகளும் தடைபடக் கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

குறித்த நிதியாண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும், உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, எதிர்வரும் வருடதுக்கன அபிவிருத்தித் திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கினார். நேற்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது, பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல விசேட கருத்திட்டங்களும், 2019ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான திட்டங்களைத் தயாரிக்குறும், ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின்

தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.

தன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.

தாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாகவும் நாட்டை முன்னேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.