மைத்திரியின் குடியுரிமை கதையால் கடும் கோபத்தில் கட்சி

ஜனாதிபதியின் குடியுரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு, அவரது குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது மக்கள் விடுதலை முன்னணியும் ஐ.தே.கவுடன் இணைந்து தவறாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் குடியுரிமையையும் பறிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

அவர்கள் நினைப்பவற்றையெல்லாம் அவ்வாறு இலகுவாகச் செய்துவிட முடியாது. அதற்கான பலமும் யாருக்கும் கிடையாது.

அடுத்த பிரதமர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் எந்த தீர்மானமோ அல்லது கலந்துரையாடல்களோ இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.

பிரதமமை நீக்கும் அல்லது நியமிக்கும் அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடமே காணப்படுகின்றது. எனவே அது குறித்து நாம் தீர்மானிக்கவோ கருத்து தெரிவிக்கவோ முடியாது“ என தெரிவித்துள்ளார்.