இலங்கையின் குழப்பத்திற்கு நாளை உயர் நீதிமன்றில் தீர்ப்பில்லை..

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி மீதான உயர் நீதிமன்றின் 3 ஆம் நாள் விசாரணை நிறைவுபெற்றுள்ளது. வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் இடம்பெற்றன.

பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

குறித்த மனுக்கள் மீது கடந்த இரண்டு தினங்களாக உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அதன் தொடர்சியாகவே இன்று மூன்றாவது நாளாகவும் மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 13 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த பின்னணியில், நேற்று தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அரசியலமைப்பின் 38 ஆம் பிரிவின் இரண்டாம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் நீதிமன்றில் கூறியுள்ளார்.

மனுதாரர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வ தன்மையை ஆட்சேபனைக்கு உட்படுத்த எந்தவித சட்டபின்புலமும் இல்லை என்பதனால் மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுக்களின் இடைநிலை மனுதாரர்களாக முன்னிலையாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பேராசிரியர் சந்தன ஜயசுமன, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த உள்ளிட்ட இடைமனுதாரர்களால் வழக்கிற்குத் தேவையான மேலதிக சான்றுகள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதற்கமைய இன்றைய விசாரணைகள், முடிவடைந்துள்ள நிலையில், வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.