தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு பொதுத் தேர்தலே சிறந்த தீர்வு

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு பொதுத் தேர்தலே சிறந்த தீர்வாக அமையும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்சான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ள டில்சான், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘நீதிக்கான குரல்’ எனும் அமைப்பின் கீழ் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த டில்சான், ”இந்த அமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கான வறிய மக்களுக்கும், வீடற்றவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகின்றோம்.

சேவை மனப்பாங்குடைய இப்பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இப்போதைக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை. நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினராக இணைந்துக் கொண்டுள்ளமையால், நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அர்த்தப்படாது.

ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நான் எப்போதும் ஒரு ஆதரவாளனாக செயற்படுவேன்” எனத் தெரிவித்தார்.