பயங்கரவாதச் தடைச் சட்டத்தால் தமிழ் இளைஞர்கள் பலர் கொலை!

“பல வருடங்களாக சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு சபையில் நேற்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.

நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிறு குற்றங்களைச் செய்தவர்கள் பாரிய தண்டனைகளை அனுபவிக்கின்றார்கள் எனவும், ஆனால், பாரிய குற்றங்களைச் செய்தவர்கள் பெரிய நபர்களாக சுதந்திரமாக உலா வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பயங்கரவாதச் தடைச் சட்டமானது எமது தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. இந்தச் சட்டத்தின் மூலம் இளைஞர்கள் பலர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். எனவே, போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இராணுவத்தின் வசமிருக்கும் பாடசாலைகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.