மனோவிடம் பேரம் பேசியதாக வெளியான விடியோ தொடர்பில் வெளியான மற்றுமொரு செய்தி

அமைச்சர் மனோ கணேசனின் மனோநிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் டீல் பேசியதாக ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய சஜீவானந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியதன் பின்னரும் தாம் அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்ந்தும் நட்பு ரீதியில் பேசி வந்ததாகவும், இதன்காரணமாக தமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு அமைய அவரின் மனோ நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அவருடன் டீல் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக 65 கோடி ரூபாய் பேரம்பேசப்பட்டமை தொடர்பிலான ஒலிநாடா ஒன்று அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கான ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இவ்வாறு பேரம்பேசப்பட்டதாக குறித்த ஒலிநாடாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய சஜீவானந்தன் என்பவருக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலிலேயே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரினால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் சஜீவானந்தனின் குறித்த தொலைபேசி உரையாடலுக்கும், அண்மைக்காலமாக ஜனநாயக மக்கள் முன்னணியுடன் முரண்பட்டிருக்கும் சண்.குகவரதனிற்கு தொடர்பு இருக்கின்றது என்ற பொருள்பட கருத்து வெளியிடப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.