இலங்கை வரலாற்றில் இதுவரையில் தமிழர் தரப்பிற்கு நீதி கிடைக்கவில்லை! அனந்தி சசிதரன்

தெற்கில் உள்ள சிங்களவர்களுக்கு மாத்திரமல்லாது தமிழர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தெற்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு தீர்ப்பளித்த நீதிமன்றம் காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பான வழக்கிலும் விரைவில் நீதியை வழங்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தெற்கில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்வதேச ரீதியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

கடந்த 7,8 வருடங்களுக்கு மேற்பட்ட காரலமாக சரணடைந்தவர்கள் தொடர்பான வழக்கினைத் தொடர்ந்து அதற்கான பதிலினை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றோம்.

தெற்கு விடயத்தில் இவ்வாறு நீதித்துறை செயற்பட்டால் அதேபோல் எங்கள் விடயத்திலும் செயற்பட வேண்டும். போரில் படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் நீதி கிடைக்க வேண்டும். ஆனால் இலங்கை வரலாற்றில் இதுவரையில் தமிழர் தரப்பிற்கு நீதி கிடைக்கவில்லை.

காணாமலாக்கப்பட்டோர், படுகொலை செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் சிறைச்சாலை படுகொலை போன்ற பல விடயங்களில் இதுவரையில் நீதி கிடைக்கப்பெறவில்லை. அதன் காரணமாகவே நாம் சர்வதேசத்தை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.