மாணவர்களும் மன அழுத்தங்களும்

தற்போது அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாவது மாணவர்கள் தான் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பல விதமான இன்னல்களை சந்திக்கும் அவர்கள் அதை யாரிடம் பகிர்ந்து கொள்ளவது என்று தெரியாமல் மனதுக்குள் வைத்து அவதிப்படுகின்றனர்.

பாடசாலை சூழலிலும் சரி வெளி சூழலிலும் சரி அவர்களுக்கான உகந்த இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உளவியல் அடிப்படையில் நோக்கினால் ஒரு சாதாரண மனிதன் தன் மனது ஒரு நிலையில் காணப்படும் போது தான் கற்பிக்கும் விடயங்கள் 100மூ சென்றடையும் என நம்பப்படுகிறது.

அவ்வாறான மனது பல உளைச்சலுக்கு உட்படுமாகவிருந்தால் கற்பித்தலும் கற்றலும் அங்கு பயனற்றதாகவும் சுமையானதாகவும் மாறி விடும். இவ்வாறான மன அழுத்தத்தை உண்டு பண்ணும் வழிகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து தீர்வை முன்வைப்பதன் மூலம் மாணவர்களை சீரான பாதையில் வழிநடத்தலாம்.

மாணவர்களோ குழந்தைகளோ சுயமாக சிந்தித்து செயற்படும் ஆற்றல் உடையவர்கள்.அவர்களை கட்டாயப்படுத்தி ஓர் விடயத்தை செய்விக்க வேண்டுமென நினைப்பது தவறாகும்.

பெற்றோர்களோ ஆசிரியர்களோ நன்றாக படிக்கும் மாணவன் மீது அதீத கரிசனம் காட்டுவதும் சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் கண்கூடாக காண முடிகிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் கவனித்தாலே அவர்களுக்கு மன அழுத்தமோ வேறு எந்த சிக்கலுமோ வர வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பெற்றோர்கள் தாங்கள் ஆசைப்பட்ட ஒன்றை தமது பிள்ளைகளை வைத்து நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்ற ஆசையானது தற்காலத்தில் பிழையான ஒன்றாகவே காணப்படுகிறது.

அனைவருக்கும் அனைத்து வகையான திறமைகளும் இருந்து விடப் போவதில்லை. ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தன்மை என்பது கட்டாயமாக காணப்படும். ஒருவனுக்கு ஏதாவது ஒரு துறையில் ஆர்வமும் திறமையும் இருந்தால் அவனுக்கென அத்துறை தொடர்பான மேலதிக உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர களமேற்படுத்தி கொடுக்க வேண்டும்.

தான் விரும்புவதை செய்வதால் அதில் ஓர் வினைத்திறன் காணப்படும். இன்றைய சூழலில் பெற்றோர்கள் பொறியியல், சட்டம், மருத்துவம் போன்ற துறைகளை இலக்கு வைத்தே பிள்ளைகளை வளர்க்கின்றனர். இதுவும் அவர்களை அத மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே ஆக விரும்பு' என்று எந்த பெற்றோரும் கூறுவதில்லை. எனவே தான் திறமையான மாணவர்களும் தனது பெற்றோரின் கனவை நனவாக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இன்றைய கல்வி தகுதி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.இதனால் இவ் மதிப்பெண்களை குறி வைத்து ஓடும் மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாவிட்டால் மனதளவில் சுருங்கி போய்விடுகிறனர்.

இதுவே அவர்களை தற்கொலை வரை தூண்டுகிறது. வகுப்பில் உள்ள முப்பது மாணவர்களும் முப்பது விதமான திறமைகளை உடையவர்கள்.அவர்களின் சிந்தனைகள் ஒரே விதமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே புள்ளிகள் அதிகமாக எடுப்பவன் அதி திறமைசாலி என்ற முடிவுக்கு வர முடியாது.

அதே சந்தர்ப்பத்தில் குறைவான புள்ளிகள் எடுப்பவனை முட்டாள் எனவும் எடைபோட கூடாது. காரணம் இரண்டு மணி நேர பரீட்சையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவனது திறமைகளை எடை போட்டு விட முடியாது. இதனை எமது சமூகம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் பாடசாலைகளின் தொகையை விட பிரத்தியேக வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஒரு பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் முக்கியமான விடயங்களை தனது பிரத்தியேக வகுப்புகளில் கூறுவது வழக்கமாகி விட்டது. இதற்கு காரணம் தனது வகுப்பிற்கு மாணவர்களை அதிகரிப்பதேயாகும்.இதனால் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாவது மாணவர்கள் தான்.

காரணம் குறித்த ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கியும் ஏனையவர்களை இரண்டாம் பட்சமாக நோக்குவதும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டு பண்ணும் விடயமாக அமைகிறது. வறுமை நிறைந்த குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் இவ் வகுப்புக்களுக்கு செல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால் இவ் ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் செயற்பாடுகளை முறையாக பாடசாலையிலேயே செயற்படுத்துவார்களாயின் தங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்யும் பெரும்பான்மையான மாணவர்களும் பிரயோசனமடைவார்கள்.

பெற்றோர்களின் அழுத்தம் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.பணம் செலவழித்து படிக்க அனுப்புகிறோம் அதற்கு நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்று சொல்லி சொல்லி பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் தான் இன்று அதிகமாக இருக்கின்றனர். உடன் படிக்கும் மாணவனை விட ஒரு மதிப்பெண் கூடுதலாக இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணம்.

மதிப்பெண் காய்க்கும் மரமாக' மாணவர்களை உருவாக்குவது தான் அவர்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். வாழ்க்கை நடைமுறை விடயங்களை கல்வியாக கொண்டு வர வேண்டும். பெற்றோர்களுக்கு அதனை தெளிவுப்படுத்தல் அவசியமாகிறது.

பிள்ளைகளை பணம் ஈட்டும் கருவியாக ஆக்காமல் உணர்வுள்ள மனித பிறவியாக எண்ணி செயல்பட வேண்டும்.கற்பதற்கு ஏற்ற சூழலை பெற்றோர்களும் வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் அல்லது பிள்ளைகளின் மனம் நோகாது அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல பல செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவையாவன:-

பிள்ளை பாடசாலைக்கு ஆர்வத்தோடு செல்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறையில் மாணவர்களை அடைத்து பாடம் நடத்தாமல் அவர்களை நன்றாக விளையாடி மகிழச் செய்து அதன் வழி சில சுமையற்ற அடிப்படைக் கல்வியை புகட்ட வேண்டும்.

அதாவது பிள்ளைகள் ஆர்வத்தோடு பாடசாலைக்கு செல்லாமல் முரண்டுப்பிடித்தால் அவர்களுக்கேற்ற சூழல் அங்கில்லை என்பதே பொருள்.

மனப்பாடத்திற்கு மதிப்பெண்கள் அதிகம் தராமல் செயல்முறையில் அறிவை வளர்க்கும் அறிவை சோதிக்கும் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மேலைத்தேய நாடுகளில் பாடசாலைகளில் வெளிப்புற வகுப்பறைகள் காணப்படுகின்றன.அங்கு பிள்ளைகளுக்கான இயற்கை சூழலை ஒட்டிய ஒப்பனைகளுடன் கூடிய வசதிகள் செய்யப்ப்டடிருக்கும்.

அங்கு செயன்முறைகளோடு இணைந்த கற்றல் முறைகள் இடம்பெறும். இவ்வாறான திட்டங்கள் இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் . அப்போது பிள்ளைகளின் மனம் கல்வியை ஏகமனதோடு ஏற்றுக்கொள்ளும்.

முன்பள்ளி கல்வி கட்டாயமாக்கப்பட்டதாகவும் , இலவசமாகவும் வழங்க வேண்டும். இலங்கையில் தற்போது ஆரம்பக் கல்வியில் இணைந்துக் கொள்ளும் சிறார்களில் 90 வீதமானோர் ஏதாவது ஒரு வகையில் முன்பள்ளிக் கல்வியை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு முன்பள்ளிகளை நடாத்தும் தனியார், அரச சார்பற்ற மற்றும் சமய சார்பான அமைப்புகள் குறித்தும் அவர்கள் தரமான முன்பள்ளிக் கல்வியை வழங்குகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இவர்கள் ஆசிரியர்களை ஆட்சேர்க்கும் போது அவர்களின், அவர்களுக்கான பயிற்சி, தகுந்த வேதனம் வழங்குதல், பிள்ளைகளுக்கு போதுமான தளபாட மற்றும் உபகரண வசதிகளை வழங்குதல் தொடர்பில் அரச மட்டத்தில் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி மன்றம், மகளிர் விவகார அமைச்சு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கான கல்வி வழங்கும் அம்சத்தில் இலங்கை ஒரு தேசிய முன்பள்ளிக் கொள்கை தேவைப்படுகின்றது. இலங்கையில் இலவசமானதும் கட்டாயமானதுமான முன்பள்ளி வழங்கும் ஏற்பாடுகள் இல்லை.

இதனால் எதிர்காலத்தில் மலேஷியா போன்ற நாடுகளில் முன்பள்ளி கல்வி வழங்கும் முறைக்கு ஏற்ப கல்வி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

மாணவர்கள் பருவமடைந்த பின்னர் மன அழுத்தமும், மன கிளர்ச்சியும் அதிகரிக்கும்.உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் படிப்பில் ஏற்படும் அதிகமான அழுத்தங்களாலும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் கல்வி வழங்கும் ஏனைய நபர்களும் மாணவர்களின் உடல் உள ரீதியான ஆளுமைகளை வெளிக்கொணரும் நோக்கில் செயற்பட வேண்டும்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன'.

-அப்துல் கலாம்- விதைகளை விதைக்கும் போது, வழி தவறி விழுந்த விதையின் மீது படும் மழைத்துளி போல கருணையுள்ளவர்களாக இருந்து அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மாணவர்களின் தேவைகளை அறிந்து ஆசான்,பெற்றோர் என்ற நிலையிலிருந்து விலகி சகபாடி போல சகல விடயங்களிலும் கைக்கோர்த்து அவர்களை மன அழுத்தங்களிலிருந்து மீட்டெடுத்து எதிர்காலத்திற்கு ஏற்றவாறான சிறந்த பிரமுகர்களை உருவாக்குவதற்காக உழைக்க தவறி விடக்கூடாது.

செல்லமுத்து ஹேமாமாலினி

கல்வியியல் சிறப்புக்கற்கை

கிழக்குப்பல்கலைக்கழகம்