பாராளுமன்றம் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டிய சரமாரி கேள்விகள்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க அனுமதித்திருக்கும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக அவர் இருக்கின்றாரா இல்லையா என்ற பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளப்படவேண்டியதாகும்

என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் கேள்வியொன்றைக் கேட்கவேண்டியிருப்பதாக முனனாள் நீதியமைச்சின் செயலாளரும் அரசியலமைப்புச் சட்ட நிபுணருமான கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியே அரசாங்கத்தின் தலைவர். தனது விருப்பத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையிலான கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவரானார். சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற மகிந்த ராஜபக்ச இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றிருக்கிறார்.

எனவே ஜனாதிபதி சிறிசேன எவ்வாறு ஏககாலத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கூட்டணியின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கமுடியும் என்று அவரிடம் கேட்பதற்கான தகுதி பாராளுமன்றத்துக்கு இருக்கிறது.

அவ்வாறு இரு பதவிகளையும் வகிப்பது அரசியலமைப்பின் அடிப்படை ஜனநாயக ஆதாரத்தை அப்பட்டமாக மீறுகின்ற செயல் என்பதை விளங்கிக்கொள்ளவில்லையா என்று பாராளுமன்றம் அவரிடம் கேட்கவேண்டும். என தெரிவித்தார்.