மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட வெள்ளாங்குளம் பன்னை, படையினர் வசமிருந்தது.

குறித்த பன்னையின் 500 ஏக்கர் காணிகளே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாகவும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில், 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளும் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.