இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வின் விசேட அதிதி?

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரதினக் கொண்டாட்டம் கொழும்பு-காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு, 4ஆம் திகதி சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்தினம் 3ஆம் திகதி இரவு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரித் பாராயணம் இடம்பெறவுள்ளது.

பிரதான வைபவத்துடன் இணைந்ததாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திரதினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.