முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்திடையே முரண்பாடு

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றிலிருந்து இராணுவத்தினர் அதிகவான குடிநீரை எடுப்பதற்கு பிரதேசமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.நேற்று மக்களுக்கும், இராணுவத்திற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

கணுக்கேணி பகுதியில் பொதுமகன் ஒருவரால், மக்கள் பாவனைக்காக வீதியில் அமைக்கப்பட்ட குழாய் கிணறு ஒன்றிலிருந்து, அதிகளவான குடிநீரினை இராணுவத்தினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியிலுள்ள கிணறுகளில் நீர் வற்றுவதுடன், கிணற்று நீர் மாசடைவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து பிரதேசசபையின் வட்டார உறுப்பினர் த.அமலனிடம் கிராம மக்கள் முறையிட்டனர். பொதுமக்கள், ஊடகவியலாளர்களை அழைத்துக்கொண்டு பிரதேசசபை உறுப்பினர் நேற்று அந்த இடத்திற்கு சென்றார்.

அங்கு இராணுவத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. இதை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டனர். பொதுமக்களை இராணுவத்தினரும் படம் பிடித்தனர்.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு இராணுவத்தால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு பொலிசார் வந்தனர். பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி அங்கு வந்தார். மக்கள் தமது குடிநீர் பிரச்சனையை தெரிவித்தபோது, “இது அரசாங்க காணி. தனிப்பட்ட ரீதியில் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களில் இதை கதைத்து முடிவெடுங்கள்“ என தெரிவித்த பொலிஸ் அதிகாரி, இராணுவத்தினர் தண்ணீர் எடுக்க அனுமதித்தார்.தொடர்ந்தும் இராணுவம் அங்கு பௌசர்களில் தண்ணீர் நிரப்பினர்.