இலங்கைக்கு விஜயம் மேற் கொண்ட லண்டன் ஹரோ மேயர்! வெடித்தது சர்ச்சை..

லண்டன், ஹரோ நகர மேயர் கரீமா மரிகர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் சமூகத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஹரோவிலுள்ள தமிழ் சமூகத்தினர் 49 பேர் கையொப்பமிட்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹரோ மேயரின் இலங்கைக்கான விஜயத்தை தொடர்ந்து, தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஹரோ மேயர், இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ ஆகியோரை சந்தித்தார்.

குறித்த சந்திப்புகளின் போதான ஒளிப்படங்களை ஃபேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர் உள்ளிட்ட தரப்பினரை நோக்கி கழுத்தை அறுக்கும் சைகையைக் காண்பித்து பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சர்ச்சைக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.