மைத்திரியின் முடிவிற்கு அதிரடி தடை

சட்டமா அதிபர் திணைக்கள மேலதிக மன்றாடியார் அதிபதி யசந்த கொடகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை நேற்று மாலை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூர்ய தலைமையில் நேற்று மாலை கூடிய அரசியலமைப்புச் சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து, ஜனாதிபதி சட்டவாளராவார் யசந்த கொடகொடவை நியமிக்க ஒப்புதல் வழங்கியது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் அதிபதி ஜனாதிபதி சட்டவாளர் யசந்த கொடகொட, மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக நியமிக்கப்படும் போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெறுகின்றார்.

ஜனாதிபதி சட்டவாளர் யசந்த கொடகொட, பெரியளவிலான நிதி மோசடிகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகி வந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் திபாலி விஜயசுந்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பரிந்துரைக்கப்பட்ட போதும் அரசியலமைப்புச் சபை அவரது பரிந்துரையை நிராகரித்தது. இதனால் அரசியலமைப்புச் சபையின் சுயாதீனத்தை ஜனாதிபதி விமர்சித்திருந்தார்.

இதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனத்தில் நீடிக்கும் நெருக்கடி நிலைக்கு முடிவு காண மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிரான் குணரத்ன, சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக மன்றாடியார் அதிபதி யசந்த கொடகொட ஆகிய இருவரும் பெயர்களை ஜனாதிபதி பரிந்துரைத்தார்.

இந்த நிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக மன்றாடியார் அதிபதி யசந்த கொடகொடவை நியமிக்க அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.