கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 413 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் அவசர விபத்துகளுக்கு உள்ளான 413 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 8 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களினால் காயமடைந்த 113 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் 49 பேர் காயமடைந்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்கள் தொடர்பில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு, தீ அனர்த்தம் காரணமாக ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் ஆறு பேர் காயமடைந்த நிலையில், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.