இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பாக இந்தியாவில் அதிரடி உத்தரவு

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரங்களை இந்தியத் தேர்தல் ஆணையகம் தடை செய்துள்ளது.

இந்திய ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சுமத்தியும், அதன் ஊழல்கள் தொடர்பிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மூன்று விளம்பரங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை பிரிவினரால் இந்தியத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரங்களின் ஊடாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம் மீது அடிப்படையற்ற விவாதத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களையும் இந்தியத் தேர்தல்கள் ஆணையகம் நேற்றைய தினம் தடை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.