வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து

கடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல, கொட்டாம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.

குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலாபத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, வேறு பிரதேசங்களுக்கும் பரவி முஸ்லிம் மக்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் என்பன தாக்கப்பட்டன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சேதமடைந்த பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களை பொலிஸாரின் துணையுடன் மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். சேதமடைந்த பகுதிகளை புனமைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த கொட்டாம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் சலிம் ஃபவுசுல் அமீரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன.

பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளபோதும், வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வியாபார ஸ்தாபனங்கள் முழுமையாக செயற்பட ஆரம்பிக்கவில்லை. மக்களின் அன்றாட செயற்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் நேற்று எவ்வித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை என்றும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.