புத்தளத்தில் வன்முறையை வேடிக்கை பார்த்தவர் யார்? விசாரணைகள் ஆரம்பம்

புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படின் குறித்த இராணுவ அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இலங்கை இராணுவ தலைமையகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

துன்மோதர பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறித்த நாசக்கார செயல்களின்போது இராணுவ சீருடையை ஒத்த ஆடையணிந்த ஒருவர் அங்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காணொளிகளும், ஒளிப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் இராணுவ அதிகாரி என்பது உறுதிபடுத்தப்படின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் உறுதியளித்துள்ளது.

இதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கு இராணுவத்தினர் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.