எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்: நீங்கள் வெளியேறுங்கள்!

நீங்கள் வெளியேறுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இராணுவத் தளபதியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

அத்துடன், போர்க் குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என நாம் நட்டாற்றில் நிற்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

யுத்தக் குற்றங்கள் குறித்து இராணுவத் தளபதியின் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “எமது தமிழ் மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறுமாறு ஒரு போதும் கோரவில்லை. கோரவும் முடியாது. அப்படியாயின் ஒரு தனிநாடாகத் தான் இருக்க முடியும்.

ஆனால் 10 இலட்சம் மக்களுக்கு 2 இலட்சம் இராணுவம் என இருப்பது மிகவும் மோசமானது. 1983ஆம் ஆண்டின் நிலைமை போன்று சில எண்ணிக்கையான இராணுவத்தினரை மட்டும் வைத்துக்கொண்டு, நாடு பூராகவும் உள்ள எண்ணிக்கைக்கு சமமாக இராணுவத்தினரை மட்டுமல்லாது முப்படையினரையும் வைத்திருக்குமாறு கோருகின்றோம்.

இராணுவத்தினர் தற்காலிகமாக சில கடமைகளைச் செய்கின்றார்கள் என்பதை வைத்துக்கொண்டு, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். அப்படியென்றால், யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றார்களா என கேள்வி எழுப்ப விரும்புகின்றோம்.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதென்பதை சர்வதேச நாடுகள் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறிவிட்டு இப்போது முடியாதென்று சொல்கின்றீர்கள். சர்வதேசத்தைப் பார்த்து சவால் விடுகின்றீர்கள்.

போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்று, இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ சிப்பாய்கள், சந்திக்குச் சந்தியும், பாடசாலைகளிலும், இராணுவத்தினரை வைத்துக்கொண்டு சொல்கின்றீர்கள். அப்படியென்றால் இராணுவத்தை வெளியேற்றுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

உண்மையில், பாடசாலைகள், கிராமங்கள், தேவாலயங்கள், கோவில்களில், படைச் சிப்பாய்களை வைத்துக்கொண்டு, எத்தனை நாட்கள் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றால், அவர்கள் எதிர்பாராத வேளையில் தாக்குதல் மேற்கொள்வார்கள். அதிலும், மக்களின் கிராமிய விழிப்புக் குழுக்கள் மூலமே இந்த தாக்குதல் தொடர்பான பாதுகாப்பினை சாதிக்க முடியும்.

பாதுகாப்பு படைகளினால் பெரியளவில் வேலை செய்ய முடியாது. வேண்டுமென்றால், குண்டை கண்டு பிடித்ததன் பின்னர், செயலழிக்கச் செய்ய இராணுவத்தினர் வீதிக்கு வரட்டும். ஆனால், சட்டத்தில் இடமில்லை என்று சொல்வீர்கள்.

போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என நாம் நட்டாற்றில் நிற்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.