கிழக்கு ஆளுநரின் இனப்பாகுபாட்டு செயற்பாடு – வியாழேந்திரன் எச்சரிக்கை

பொறுப்புணர்வு இல்லாமல் கிழக்கு மாகாண ஆளுநர் இன ரீதியாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பித்துவரும் முஸ்லிம் ஆசிரியர்களை கிழக்கு ஆளுநர் உடனடியா இடமாற்றிவரும் செயற்பாட்டால் தமிழ் பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கில் தமிழ் கல்வி வலயங்கள் பாடசாலைகளை மூடி பெற்றோர்கள் வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியவாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண ஆளுநரின் தீவிர நடவடிக்கையாக, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை அவசரமாக இடமாற்றம் செய்துவருகின்றார்.

கிழக்கு மாகாண ஆளுனரின் உத்தரவுக்கு அமைய மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் அதிரடியாக இந்த வேலையில் இறங்கியுள்ளார். வழமையாக ஒரு ஆசிரியரை ஒரு பாடசாலையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால் அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் . அத்துடன் பதில் ஆள் இன்றியும் விடுவிக்க இயலாது. இருந்தும் யாருடைய அனுமதிகளையும் பெறாமல் சகல விதிகளையும் மீறி இச்செயல் நடைபெறுகிறது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மண்முனை மேற்கு என நான்கு தமிழ் கல்வி வலயம் இருக்கின்றது. இந்த கல்வி வலயங்களில் மாகாண பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் அடங்கலாக 252 முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 4 தினங்களில் 120க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.

பட்டிருப்பு வலயத்தில் 123 ஆசிரியர் பற்றாக்குறையுள்ளதுடன் 61 முஸ்லிம் ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றன். இதில் 18 முஸ்லிம் ஆசிரியர்கள் இடம்மாறிச் சென்றுள்ளனர். ஏனையவர்களும் செல்லவுள்ளனர். அத்துடன் கல்விசாரா ஊழியர்கள் 12 பேரும் இடமாற்றம் கேட்டுள்ளனர்.

அவ்வாறே மட்டக்களப்பு 9 ஆசிரியர்களும், கல்குமா வலயத்தில் 71 ஆசிரியர்களும், மண்முனை மேற்குவலயத்தில் 22 ஆசிரியர்களும் வெளியேறியுள்ளனர்.

எனவே கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லிம்களுக்கு மட்டுமான ஆளுநரா என சந்தேகம் ஏற்படுகின்றது?

இந்நிலையில், கடந்த 3 தசாப்தங்களாக யுத்தத்தினால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய இனத்தை மட்டுதமே சிந்தித்து செயற்படுகின்ற கிழக்கு ஆளுநர் உடனடியாக வெளியேறிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு சமனாக தமிழ் ஆசிரியர்களளை உடன் நியமிக்க வேண்டும்.

அதேநேரம் முஸ்லிம் பாடசாலையில் கற்பிக்கின்ற தமிழ் ஆசிரியர்கள் விடுவிக்கப்படவேண்டும். அதில் வெற்றிடமாக இருக்கின்ற ஆசிரியர்களுக்கு தமிழ் வேலையற்ற பட்டதாரிகள் உடன் நியமிக்கப்படவேண்டும்

இல்லாவிட்டால் கிழக்கில் கல்வி வலயங்கள், பாடசாலைகளை மூடி பெற்றோர்களும் மாணவர்களும் வீதிக்கு இறங்குவார்கள். இந்த செய்தியை ஜனாதிபதிக்கும் தெரிவிப்போம்” என்று கூறினார்.