நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தின் சார்பில் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் அடாத்தாக பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களை உடனடியாக அகற்றும்படி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்.

மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பல சட்டத்தரணிகள் மனுதாரர் சார்பில் முன்னிலையாகினர்.

மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது,

நேற்று வழிபாடு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரமான பெயர்பலகை நாட்டலுக்கு சென்றவர்களிற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதை மூத்த சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பெயர்ப்பலகை நாட்ட சென்றவர்கள் பிக்கு, பொலிசாரால் இடையூறு செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு தூண் அமைக்கப்பட்டு சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பெயரை கணதேவி தேவாலயமென மாற்றம் செய்யப்பட்டுள்ளதை, மாற்றி நீராவியடி பிள்ளையார் ஆலயமென மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதை செய்வதற்கு நேற்று தடையேற்படுத்தப்பட்டது. இதனால் இந்த இரண்டு விடயங்களிலும் நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.

இதையடுத்து, சிசிரிவி கமரா பொருத்த யார் அனுமதித்தது என்று முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நீதிமன்றம் வினவியது.

அத்துடன், உடனடியாக அதை அகற்றும்படி உத்தரவிட்டது. இன்று அதை அகற்றுவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன், கணதேவி தேவாலயம் என்ற பெயரையும் மாற்றி, நீராவியடி பிள்ளையார் ஆலயமென மாற்றும்படி நீதவான் உத்தரவிட்டார்.