ஜனாதிபதியை சண்டைக்கிழுக்கும் ஐ.தே.க - தயாசிறி சாடல்

நாட்டின் ஸ்திரமான நிலையை மீண்டும் சீர்குழைக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி செயற்படுகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இன்று நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி சற்றும் மக்களைப் பற்றி சிந்திக்காது முட்டாள் தனமாக செயற்பட்டுக் கொண்டிருகின்றது.

தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் முரண்பட்டுக் கொண்டு பாரிய பிரச்சினைகளை ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றது.

தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து கூட்டு எதிர்கட்சியும் ஆதரவளித்தது.

தற்போது ஜனாதிபதியை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அவர்களது குறிக்கோள் நிறைவடையும் வரை முன்னெடுக்கப்படும்.

ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தால் அதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

சம்பிரதாயமாக ஒவ்வொரு வாரமும் கூடும் அமைச்சரவை இந்த வாரம் கூடவில்லை.செவ்வாய்கிழமை மீண்டும் தெரிவுக்குழு கூடியதால் வழமையான அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமலிருப்பது குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.