வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு சாதாரணதர, உயர்தர பரீட்சை வாய்ப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தூதரகங்களின் ஊடாக வழிகளை செய்யும் செயல்முறையொன்றை முன்னெடுக்குமாறு பரீட்சை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் நவீனமயப்படுத்தலுக்காக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பரீந்துரையின் பிரகாரம் பரீட்சை திணைக்களத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இணையளத்தளம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதனை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

பரீட்சைகள் திணைக்களம் நம்பிக்கைக்கு பாத்திரமான நிறுவனமாக இயங்க வேண்டும். அதற்காக பல்வேறு செயல்முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.அத்துடன் பல்வேறு பிரத்தியேக தலையீடுகளை முடிந்தளவில் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நான் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று நான்கு வருடங்களில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை கல்வி துறையில் முன்னெடுத்துள்ளேன். அச்சமின்றி தீர்மானங்கள் பல எடுத்த போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து இடையூறுகளையும் விமர்சனங்களையும் சந்தித்தேன்.

டெப் கணிணி வழங்கும் திட்டம் மாத்திரமே முன்னெடுக்க முடியாமல் போனது.எனினும் எப்படியாவது மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்.

கல்வியை அடிப்படையாக கொண்டே எதிர்காலம் அமைய போகின்றது. இந்நிலையில் புதிய பிரவேசங்களை இனங்கண்டு எல்லைகளை கடந்து செயற்பட்டால் எம்மால் பல மாற்றங்களை செய்ய முடியும்.

இதன்படி பரீட்சை சான்றிதழ்களை இணையளத்தளத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்டமாகும் என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.