முழுமையாக சிங்களமே தெரியாது! ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்! உங்களிற்குத் தெரியுமா?

புத்தளம், கல்பிட்டியில் உள்ள 14 சிறிய தீவுகளில் ஒன்று தான் உச்சமுனை கிராமம் என குறித்த கிராமத்தில் வாழ்ந்து வரும் செபஸ்டியன் ரொபர்ட் என்பவர் கூறியுள்ளார்.

இந்த கிராமம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த தீவிற்கு புத்தளம் களப்பினூடாக 1 மணித்தியாலம் படகில் செல்ல வேண்டும். உச்சமுனை ஒரு தீபகற்பமாகும். இந்த தீவில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்கிறார்கள்.

இவர்களது பிரதான தொழில் மீன்பிடித்தல்.அங்கிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ‘கீரி முண்டல’ பகுதியில் இருந்து தான் மூதாதையர் உச்சமுனைக்கு வந்தார்கள்.

ஆரம்பத்தில் 6 அல்லது 7 குடும்பங்களே வந்தனர்.அப்போது எனக்கு வயது 12.இங்கு இப்போது 300 குடும்பங்கள் உள்ளன.

நாம் அனைவரும் தமிழில்தான் பேசுகிறோம், என்றாலும் நாங்கள் சிங்களவர்களே. எங்களில் சிலருக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் மட்டுமல்ல, அடையாள அட்டையுமில்லை. அதனால் வாக்குரிமையுமில்லை.

என்றாலும் எங்களுக்குள் முரண்பாடு இல்லாது சந்தோசமாக வாழ்கிறோம். 25 கிலோமீற்றர் பரப்பை கொண்ட இங்கு இங்குள்ள சிறுவர்களின் கல்விக்காக உச்சிமுனை ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்று மட்டுமே உள்ளது.இதில், ஐந்தாம் வகுப்பு வரையிலே கற்பிக்கப்படுகிறது.

இதில், வசதி படைத்தவர்களது பிள்ளைகள் மட்டுமே கற்பிட்டிக்கு போகிறார்கள். ஏனையோர் தமது குலத் தொழிலான மீன்பிடித்தலை மேற்கொள்ள செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.