ரணிலிடம் இருந்து கூட்டமைப்பிற்கு கிடைத்த முக்கிய உத்தரவாத கடிதம்! கடிதத்தில் உள்ளது என்ன??

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்து எழுத்துமூல உத்தரவாதமொன்றை ரணில் விக்கிரமசிங்க தற்போது கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளார்.

இன்று காலையில் கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் சற்று முன்னர் வரை நீண்டநேரமாக நீடித்தது.

இதில், அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் எந்த லாபமுமில்லையென அனேகமான உறுப்பினர்கள் அப்பிராயப்பட்டனர்.

அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசை வீழ்த்துவதால் எந்த பலனும் கிடைக்காதென உறுப்பினர்கள் அப்பிராயம் தெரிவித்தனர்.

எனினும், கூட்டமைப்பின் ஆதரவிற்காக கல்முனை விவகாரத்தையாவது ரணில் நிறைவேற்றித்தர வேண்டுமென எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசி, உத்தரவாதத்தை பெறும் முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து இதுவரை பகிரங்கமாக பேசப்படவில்லை. ஆனாலும், அரசை வீழ்த்தி பலனில்லையென அப்பிராயப்பட்டனர்.

பின்னர், பிரதமரை கூட்டமைப்பின் குழுவொன்று சந்தித்து பேசியது. இதில் கல்முனையை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழியை இரண்டாவது முறையாக எழுத்துமூலம் வழங்கியுள்ளார்.

இன்று வழங்கப்பட்ட உத்தரவாத கடிதத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளரை நியமிப்பது மற்றும் எல்லைமீள் நிர்ணய பணிகளை பின்னர் செய்வதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவாதத்தையடுத்து அம்பாறை எம்.பி, கோடீஸ்வரனும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டார் என அறிய வருகிறது.

மாலை 3 மணிக்கு மீளவும் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடி, அரசை ஆதரிக்கும் முடிவை உத்தியோகபூர்வமாக மேற்கொள்வார்கள்.