யாழ்.நாவற்குழியில் சிவபூமி திருவாசக அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடுகள் மும்முரம்.!

உலகப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை உருவாக்கம் பெற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு திருவாசக விழா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்-04 மணி முதல் சிவபூமி திருவாசக அரண்மனையில் இடம்பெறவுள்ளது. மேற்படி விழாவுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ள திருவாசக விழாவில் நல்லை ஆதீனகுரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை ஆற்றுவார்.

அதனைத் தொடர்ந்து அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் வ.மனோமோகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஆகியோர் வாழ்த்துரைகள் நிகழ்த்துவர்.

சிறப்பு நிகழ்வுகளாக இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஓதுவார் திருமுறைக் கலாநிதி திருத்தணி என். சுவாமிநாதனின் திருவாசகம் சிறப்பு அரங்கு பிற்பகல்-05.30 மணி முதல் 06.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெறும்.

தொடர்ந்து பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவர்களின் “கூத்தன் இவ்வானும் குவலயமும்” பரத நாட்டிய அரங்கு என்பன நடைபெறும். அதனைத் தொடர்ந்து விருந்துபசாரமும் இடம்பெறும்.

இதேவேளை, திருவாசக அரண்மணையில் எழுந்தருளியிருக்கும் சிவதெட்சணாமூர்த்திக்கும், இங்கு பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கும் நூற்றி எட்டு சிவலிங்கங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு நாளை மறுதினம்-13 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணியளவில் கும்பாபிஷேக தின நிகழ்வும் சிறப்புற இடம்பெறவுள்ளது.

மேற்படி திருவாசக விழாவிலும், கும்பாபிஷேக தின நிகழ்விலும் அன்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சிவபூமி அறக்கட்டளையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.