இறைவனடி சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார்.!

யாழ் மறைமாவட்டத்தின் சிரேஷ்ட அருட்தந்தையாரான ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் இன்று கொழும்பில் மரடைப்பு நோய் காரணமாக தனது 74வது வயதில் இறந்துள்ளதாக சமூக வலைதளம் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் யாழ் மனித முன்னேற்ற நடு நிலையத்தின் பணிப்பாளராகவும் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் உள்ள ஆரோகணம் இளையோர் விடுதி இல்லத்தின் இயக்குனராகவும் வன்னி பெருநிலப்பரப்பு நிலத்தில் பல்வேறு பங்குகளில் பங்கு தந்தையாக இருந்து அருட்பணிபுரிந்தவர்.

கடற்கோள் அனார்த்தம் ஏற்பட்டபோது முல்லைத்தீவு பங்குதந்தையாக இருந்து மதங்களைக் கடந்து மனிதாபிமான பணியை அப்பகுதி மக்களுக்கு அறப்பணிபுரிந்தவர். முல்லைத்தீவு நகரில் அமையப் பெற்ற கடற்கோள் நினைவாலயத்தை (பழைய இராயப்பர் கோவிலில்) நிறுவ முன்நின்று உதவியவர்.

அனைத்து மதத்தவர்களாலும் மதிக்கப்பட்டவர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நேசித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராளிகளினாலும் தலைமையாலும் நேசிக்கப்பட்ட மனிதர்.

யுத்தகாலத்தில் மக்களோடு மக்களாக இருந்துஅருட்பணியுடன் அறப்பணியாற்றியவர் . அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் 2009இறுதி யுத்தகாலத்தில் வலைஞர் மடம்பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது அரசபடையினால் நடாத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தார்.

அருட் தந்தையார் ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் இழப்பானது தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும். அருட்தந்தையாருக்கு நாங்களும் அஞ்சலிக்கின்றோம்..