காலாவதியான மருந்துப்பொருட்கள் : விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பம்!

களனி பகுதியில் நடத்திச்செல்லப்பட்ட உற்பத்தி நிலையத்தினால் விநியோகிக்கப்பட்ட பாவனைக்கு உதவாத மருந்துப்பொருட்களைத் தேடி விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை, கம்பஹா மாவட்ட உணவு மற்றும் ஔடத பரிசோதகர்கள் இணைந்து களனி ரயில்வே வீதீயில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடத்தினை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி தரமற்ற வகையில் மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த உற்பத்தியாளர் நீண்டகாலமாக தரமற்ற வகையில் காலாவதியான மருந்துப் பொருட்களை மீள்பொதியிட்டு நாடு பூராகவும் விநியோகித்தமை தெரியவந்துள்ளது.

இந்த உற்பத்தி நிலையத்தினை நடத்திச்சென்ற கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 56 வயதான நபர் கைது செய்யப்பட்டு, கடந்த 15 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதனையடுத்து, சந்தேகநபரிடம் இரண்டு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதையடுத்து விடுதலை செய்யப்பட்டதுடன்,

தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட மருந்துப் பொருட்களை அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

13 வருடங்களாக குறித்த பகுதியில் மருந்துப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததுடன், 2013 ஆம் ஆண்டிலிருந்து தரமற்ற வகையில் மருந்துப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.

வலி நிவாரண மருந்துகள்,நோய் எதிர்ப்பு மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட 10 வகையான மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், சில மருந்துப்பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு நகருக்கு அண்மித்த பகுதியில் உள்ள மருந்து விநியோக நிலையத்தினை நேற்று பரிசோதனைக்குட்படுத்தியபோது, குறித்த மருந்துப்பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துப்பொருட்கள் கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையில் வைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.