ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவும் சுதந்திர கட்சி எம்.பிக்கள்! மைத்திரிக்கு விழுந்த மேலும் ஒரு இடி!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் மொஹான் லால் க்ரேரோ ஆகியோர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது குறித்த இரு உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காது வாக்களிப்பை தவிர்த்திருந்தமையும் அதற்கு பிரதான காரணமென தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொள்கையளவில் தீர்மானம் மேற்கொண்டிருந்ததுடன் குறித்த தீர்மானத்தை இவ்விரு எம்.பி க்களும் நிராகரித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருங்கிய, நம்பிக்கைக்குரியவராக இருந்ததுடன் அண்மைக் காலமாக அவர் தூரமாகி செயற்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அரசியல் பயணத்தை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன, இந்திக பண்டாரநாயக்க, ஏ.எச்.எம்.பெளஸி, மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.