ஆட்கொல்லி டெங்கு நோயை தடுக்க முடியுமா? இன்னும் சில நாட்களில்! மக்களே அவதானம்

நாம் வாழும் இன்றைய நவீன உலகு எதிர் கொள்கின்ற மிகப்பெரும் சவால்களில் ஒன்றுதான் கொல்லும் தொற்று நோய்கள் (deadly infectious disease). இந்த நோய்கள் வரலாறு நெடுகிலும் மனிதனுக்கு சவாலாகவே இருந்து வருகின்றன.

உலகம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்தாலும் இந்த சவாலை சமாளிக்க முடியாமல் விஞ்ஞானம், மருத்துவம் என்பன இன்னும் திணறிக் கொண்டு தான் இருக்கின்றன. இது போதாது என்று காலத்துக்குக் காலம் வரும் ஒவ்வொரு புதுவகை தொற்று நோய்களும் பாமர மக்களின் பீதியை நன்றாக கிளப்பிக் கொண்டுதானிருக்கின்றன.

பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சார்ஸ், இன்பளுவன்சா, டெங்கு, ஷிகா, என அச்சமடையவைக்கும் இந்த தொற்றுக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இப்படியான ஆட்கொல்லி தொற்று நோய்கள் வருவதற்கான காரணிகள் யாவை? இவைகள் எவ்வாறு பரவுகின்றன? இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது? என்பதைப் பற்றி கவலைகள் விஞ்ஞானிகள் முதல் நாட்டாமை வரை எல்லோரிடமும் பரவலாக இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒற்றைப் பதில் சுத்தம் சுகம் தரும் என்பதிலே இருக்கிறது.

சுத்தம் என்பது ஈமானின் பாதியாகும், சுத்தம் சுகம் தரும் என்பதை தெரிந்த மக்கள், நோயில்லா வாழ்வின் பெரும் பகுதியை தீர்மானிப்பதும் இந்த சுத்தம் தான் என்பதை தெரிந்தோ தெரியாமலோ வசதியாக மறந்து விடுகின்றனர்.

தமது வாழ்வில் அன்றாட சுத்தத்தை மிக சிரத்தையாக பேணும் பலர் தாம் வாழும் சூழல்சார் சுத்தத்தைப் பேண முயற்சிக்காமல், அது பற்றிய கவலைகள் இல்லாமல் இருப்பது தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணியாக இருக்கின்றது. ஒன்றில் கவனமாகவும், மற்றொன்றில் அசிரத்தையாவும் இருந்து விடுவது தான் பிரச்சினையின் ஆணி வேராக இருக்கிறது.

நாம் சுத்தமாக இருப்பது மட்டும் போதாது, நமது சூழலையும் சுத்தமாக வைத்திருப்பது தான் தொற்றும் நோய்களில் இருந்து நம்மையும் நமது குழந்தைச் செல்வங்களையும் பாதுகாக்கும் மிகப் பெரும் கேடயம் என்பதை தெரிந்து கொண்டால் நிறைய தொற்று நோய்கள் இலேசாக மறைந்து விடும். தனி மனித சுத்தம் போலவே சுற்றுச் சூழல் சுத்தமும் மிக முக்கியமானது.

கழிவுகளை நேர்த்தியான முறையில் முகாமைத்துவம் செய்தல், வடிகான்களை உரிய முறையில் துப்பரவு செய்தல், பராமரித்தல் என்பனவும் சுத்தமாக இருத்தலின் ஒரு பகுதி தான். இவைகள் கவனிக்கப்படாத பொதுப் பிரச்சினையாக இருப்பது தான் இந்த நுளம்புகளின், அது போன்ற நோய்க் காவிகளின் பெருக்கம், ஆட்கொல்லித் தொற்று நோய்களின் தாக்கம், பரவுகை என்பன மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கான அடிப்படை காரணமாக அமைந்தது விடுகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் இந்த டெங்குகாய்ச்சல்.

இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிக்க இருக்கிறது. மழை விழ தொடங்கியதும் இந்த ஆட் கொல்லி நோயும் எங்கும் பரவ ஆரம்பித்து விடும். அதற்கு முன்னால் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது தான் இந்த நோய் வராமல் தடுக்கக்கூடிய மிகச் சிறப்பான தடுப்பு முறையாக இருக்கிறது.

நோய் பரவ ஆரம்பித்ததன் பின் இவை பற்றி யோசிப்பதும், பேசுவதும் மாடு ஓடியதன் பின் காலையை மூடுவது போன்றதுதான். இப்பொழுது காலி மாத்தறை போன்ற தென் மாகாணங்களின் பெரும் பகுதிகளில் டெங்கு நோய் கோரத் தாண்டவம் ஆடுவதாக அறியக் கிடைக்கிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளுக்கும் பரவுவதற்கான சாத்தியம் இருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இப்பொழுது திட்டமிடுவதும் அதற்காக முயற்சிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள் பற்றி நாம் ஒவ்வொருவரும் சற்று சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இதற்குரிய தீர்வுகளை நாம் ஒவ்வொரும் தனிநபராகவோ அல்லது சமூகமாகவோ செய்ய வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

காற்றோட்டமான, வெளிச்சமான வீட்டு அமைப்புக்கள், சிறிய வீடாக இருந்தாலும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பேணும் ஒழுங்கு முறை என்பன நோய்க்காவிகளின் பெருக்கத்தை தடுக்கக்கூடியனவாக உள்ளன. குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கும், வீடு, வாசல், தோட்டத்தை உரிய கால இடைவெளியில் சுத்தப்படுத்துவதற்கும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

நமது வளவினுள் உள்ள நீர் தேங்கும் பண்டங்களை அப்புறப்படுத்துவது, வீட்டுக் கூரைகளை சுத்தப்படுத்துவது போன்று நமது வீட்டின் முன்னால் உள்ள வடிகாண்களை, வீதியை, அயலவர்களின் வெற்று காணிகளையும் நாம் கவனமெடுத்து சுத்தப்படுத்தினால் மாத்திரமே நாம் முழுமையாக சுத்தமானவர்கள் என மார்பு தட்ட முடியும்.

அப்போது தான் இந்த தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெறவும் முடியும். அது போலவே நாம் பிரயாணம் செய்யும் இடங்கள், தங்கி இருக்கும் பொது இடங்கள், பொது வாகனங்கள் போன்றவற்றின் சுத்தத்தை, நேர்த்தியை பேணுவது நாம் செய்யும் சமூகக் கடமை என்பதை மனதில் வைக்க வேண்டும்.

இவைகளையெல்லாம் விட்டு விட்டு பூச்சி மருந்து அடித்தால் நோய்க் காவிகள் இல்லாமல் ஆகிவிடும் என்று வாழாவிருப்பது சிரிசேனத்தனமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும் என்பது போல வரு முன் காப்பதே மிகச்சிறந்தது. எனவே தொற்று நோய் வருவதை தடுப்பதற்கு முன்னால் அது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியமாகின்றது.

தொற்று நோய்கள் என்றால் என்ன, அவை எப்படி தொற்றுகின்றன? இதன் அடிப்படைகள் எவ்வாறானவை ? தொற்றைத் தடுப்பது எவ்வாறு? தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றிய நமது அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவைகள் எல்லாவற்றையும் இந்த பத்தியில் விளக்குவது இயலாத காரியம். நவீன கணணி யுகத்திலே இது தொடர்பான தகவல்களை மிக மிக இலகுவாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

தொற்று நோய்கள், அதன் தடுப்பு முறைகள் பற்றி நமது மத குருக்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறும் தரப்பினரும் தமது முயற்சிகளை முன்னெடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.