மானிப்பாயில் கொல்லப்பட்ட இளைஞன் அப்படி இல்லையாம்? இப்படியாம்..

யாழ்ப்பாணம் மானிப்பாய் இணுவில் வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு எட்டு மணி நாற்பது நிமிடமளவில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு எந்த குழுவுடனும் தொடர்பில்லையென உறவினர்கள் இன்று பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லையென உறவினர்கள் தெரிவிப்பு

யாழ் தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞனே இலங்கைப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்தபோது நிற்காமல் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இளைஞனின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உறவினர்கள் அடையாளம் காண்பித்தனர்.

கொல்லப்பட்ட இளைஞன் தனது நண்பர்கள் ஆறு பேரோடு மூன்று மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் ஆனால் அவர்களுக்கும் எந்தக் குழுவுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட இளைஞனின் தந்தை சமீபத்தில் புற்றுநோயால் இறந்துள்ளார். குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளையென உறவினர்கள் இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

ஆனால் கொல்லப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா எனப்படும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவரென இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐவான் குணசேகரா கூறியுள்ளார்.

அதேவேளை. கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்வையிடுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையின் சவச்சாலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்ற நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த நான்கு இளைஞர்களும் கொல்லப்பட்ட இளைஞனின் நண்பர்களென உறவினர்கள் கூறுகின்றனர்.

யாழ் மானிப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை ஆம்பித்துள்ளதாகக் கூறப்பட்டபோதும், இளைஞனைச் சுட்டுக் கொன்ற பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய இருவரும் யாழ் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு இலங்கைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கைப் பொலிஸார் ஐவர் கைது செய்யப்பட்ட போதும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.