இந்தியாவில் சம்பந்தன் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னனி வேட்பாளரை தான் ஆதரிக்கப் போகிறது. புதுடில்லியில் சம்மந்தன் இராஜதந்திரிகளுடனும் பேச்சு நடத்துவார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பினுடைய தலைவர் சம்மந்தன் ஐயா நேற்றைய தினம் தனது மருத்துவ சிகிச்சைக்காக புதுடில்லி சென்றிருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில் அவருடைய மருத்துவ சிகிச்சை மட்டுமல்ல, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது போன்ற விடயம் தொடர்பிலும் இராஜதந்திரிகள் மட்டத்தில் நிச்சயமாக பேசப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

2015ம் ஆண்டு இதே மாதிரியான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற இருந்த இறுதிக் கட்டத்தில் இரண்டு வார காலம் சம்மந்தன் ஐயா சென்னையில் தங்கியிருந்தவர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பொது வேட்பாளர் தொடர்பில் சில பேரம் பேசல்கள் இடம்பெற்றது. அவை தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த பேரம் பேசல்கள் அல்ல. தங்களுடைய தனிப்பட்ட நலன்கள் சார்ந்த பேரம் பேசல்களே நடைபெற்றன.

இரண்டு வருட காலம் அங்கிருந்து தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்று மறுநாள் இங்கு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய நான்கு பங்காளிக் கட்சிகளும் கொழும்பு ஜானகி ஹோட்டலில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பதாக கூறப்பட்டது.

தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் குறித்து கடந்த தேர்தலில் பேரம் பேசலை தவிர்த்து தனிப்பட்ட நலனுக்காக பேரம்பேசல்கள் நடைபெற்று அதற்கு சில பிரதி உபகாரங்களும் செய்யப்பட்டது. தனிப்பட்ட பேரம் பேசல்களும், சுயநலங்களும் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுள்ளது.

அந்த ஜனாதிபதி தேர்தலில் அன்றிருந்த இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனும், ஜனாதிபதி வேட்பாளர்களுடனும், எங்களுடைய மக்களின் நலன்சார்ந்து ஒரு உறுதிமொழியோ, உத்தரவாதமோ பெற்றுக் கொள்ளவில்லை. அப்படியொரு உடன்படிக்கை செய்வது என கேட்டபோது ஜனாதிபதி அதனை மறுத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தில் இருக்கின்ற வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது சஜித் பிரேமதாசாவோ அவர்களை தான் நிச்சயமாக ஆதரிக்கப் போகிறது. கடந்த நான்கரை வருடக காலமாக இவர்களுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவுக்காக இவர்கள் ஐ.நா மனிதவுரிமை பேரவையையும், இலங்கையில் இருக்கின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாத்தியிருக்கிறார்கள்.

நான்கரை வருடமாக பிரதமர், ஜனாதிபதி ஏமாற்றி விட்டார் என கூட்டமைப்பில் இருக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர். இவ்வாறு கூறிக்கொண்டு மீண்டும் இதே ஐக்கிய தேசிய முன்னனி வேட்பாளரை தான் இவர்கள் ஆதரிக்கப் போகிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் உங்கள் தனிப்பட்ட நலனுக்கு பேரம் பேசியது போன்று அதாவது பணத்திற்காக நீங்கள் பேரம் பேசுவீர்களாகவிருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள்.

ஐக்கிய தேசிய முன்னனிக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் தமிழ் மக்களது அரசியல் தீர்வு தொடர்பாகவும், தேர்தல் காலத்தில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் வேட்பாளர்களிடதில் சரியான உறுதிமொழியைப் பெற்று கொள்வதுடன் நில்லாது சர்வதேச ஈராஜதந்திகளிடம் இருந்தும் உறுதி மொழியை பெற வேண்டும். இதைவிடுத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செய்ததினைப் போன்று நடந்து கொண்டால் அதற்குரிய விளைவை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களிடம் இருந்து இவர்கள் பெற்றுக் கொள்வார்கள் எனத்தெரிவித்தார்.