வெளிநாடொன்றில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உட்பட பல நாடுகளின் அகதிகள்!

நிரந்தர பாதுகாப்பு விசாக்களை அரசாங்கம் தற்காலிக விசாக்களுடன் மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னி உள்துறை அலுவலகம் முன்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விசா கொள்கையால் பல அகதிகளுக்கு நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தற்காலிக விசா மற்றும் பிரிட்ஜிங் விசாவிலேயே தாங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி நேற்று நூற்றுக்கணக்கான அகதிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

பிரிட்ஜிங் விசாக்கள் மற்றும் தற்காலிக விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்படுவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டதுடன், பாதுகாப்பை மறுக்க இந்த செயல்முறையைப் நுட்பமாக பயன்படுத்துவதாக உள்துறை அலுவலகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர், நான் அம்மாவின் பிரிவில் வாடுவதாக குறிப்பிட்டு பதாதைகள் வைத்திருந்தனர். மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்திருந்தனர்.

இந்த விசா நடைமுறையில் தாம் மீண்டும் தமது தாய்நாட்டுக்கு சென்றால் விசாக்களை இழக்க நேரிடுவதாகவும் குறிப்பிட்டனர்.

தற்காலிக விசாக்கள் மூலம் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகள் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் மற்றும் பாதுகாப்பான புகலிட நிறுவன விசாக்கள் ஆகியவற்றில் சுமார் 30,000 பேர் உள்ளனர், இதில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டுமே வதிவிடம் வழங்கப்படுகின்றது.

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற அகதிகளில் பாரிய அளவிலான இலங்கையர்களும் இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன்னால் இதே போன்றதொரு போராட்டம் நடத்தப்பட்டது. அதிலும் இலங்கை உட்பட பல நாடுகளில் அகதிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.