சஜித் பிரேமதாசவின் பலமான அறிவிப்பு

சில விமர்சனங்களுக்கு மத்தியிலும் நேர்மறையாகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதன்போது வேட்பாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி தீர்மானிக்கும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு ஆட்சேபனை எதுவம் இல்லை.

ஆனால் கொள்கை அடிப்படையிலும், குறிக்கோள் அடிப்படையிலும் அவரது எதிர்கால பயணம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நான் எதிர்வரும் நாட்களில் சிறந்த பயணத்தை முன்னெடுக்கவுள்ளேன்.

எதிரிணி ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை தீர்மானிக்காது. மாறாக நிலையான கொள்கை மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களை மையப்படுத்தியே எமது தெரிவு அமையும்” என்றார்.

இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலானவர்கள் உங்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள்.

இவ்வாறானவொரு நிலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏன் உங்களை வேட்பாளராக களமிறக்க ஆதரவு வழங்க மறுத்து வருகிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உண்மை என்றாவது வெல்லும் எனக் கூறினார்.

அத்துடன், உங்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு இடமளிக்காவிட்டால் தனித்து செயற்படுவோம் என்றே நிலைப்பாட்டிலேயே கட்சியில் அனேகமான உறுப்பினர்கள் இருக்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“நான் எதனையும் எதிர்மறையாக சிந்தித்து செயற்பட விரும்புவதில்லை. நேர்மையான முறையில் செயற்பட்டு எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

நேர்மறையான சிந்தனைகளை முறையாக கடைப்பிடிகப்பவனாக இருந்து வருகிறேன்” என்றார்.