ரணிலிற்கு பேரிடியான தகவல்! 23ம் திகதி சஜித்தின் அடுத்த நகர்வு..

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியின் அறிவிப்பும், வேட்பாளர் அறிமுகமும் செப்ரெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 5ம் திகதி கூட்டணி அறிவிப்பு வெளியாகுமென முன்னர் திட்டமிடப்பட்ட போதும், அது சாத்தியமாகவில்லை. கூட்டணி விவகாரத்தில் இழுபறி நிலவுகிறது.

இந்தநிலையில், நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்படி, கூட்டணி விவகாரத்தை இறுதி செய்ய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் அந்த குழு கலந்துரையாடவுள்ளது.

அனேகமாக இந்த மாத இறுதிக்குள் கூட்டணி விவகாரங்கள் இறுதியாகி விடும் என ஐ.தே.க தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்ரெம்பர் முதல் வாரத்தில் காலி முகத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்து, கூட்டணி அறிவிப்புடன், வேட்பாளர் அறிவிப்பும் இடம்பெறுமென ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐ.தே.கவிற்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் நிச்சயமான நிலைமை தோன்றவில்லை.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகிய மும்முனை போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது.

கட்சியின் பொதுக்குழு வேட்பாளரை தீர்மானிக்கும் என காய் நகர்த்தும் ரணில், பொதுக்குழுவில் பலமான பிடியை வைத்துள்ளார். எனவே அவருக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன.

இந்த பந்தயத்தில் முன்னணியிலுள்ள சஜித் பிரேமதாசாவை கட்சியின் பெரும்பாலான எம்.பிக்கள், ஆதரவாளர்கள் ஆதரிக்கிறார்கள்.

எவ்வாறாயினும், ஐ.தே.க சார்பில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அந்த கட்சி சார்பில் 15 வருடங்களின் பின்னர் நிறுத்தப்படும் வேட்பாளர் அவராவார்.

2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டதன் பின்னர், அடுத்த இரண்டு தேர்தல்களிலும் பொது வேட்பாளரையே ஐ.தே.க ஆதரித்தது.

இதேவேளை, இம்மாதம் 23ம் திகதி மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில், சஜித் ஆதரவு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பதுளையில் பேரணி இடம்பெற்ற நிலையில், இரண்டாவது பேரணி மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சஜித்தை வேட்பாளராக்க வேண்டுமென தீவிரமாக செயற்பட்டு வரும் மங்கள சமரவீர இந்த பேரணியை ஏற்பாடு செய்கிறார்.

ஒவ்வேரு மாவட்டத்திலும் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு பெருகி வருகின்றமையால் ரணில் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.