யாழில் பொலிஸாரின் திடீர் நடவடிக்கை! பீதியில் மக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதால்அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி கொலைச் சதி மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் சம்பவங்களை அடுத்து அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.

அவர் பருத்தித்துறை, தீவகம் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களுக்கு சென்று பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச – தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களை பொலிஸார் அவசர அவசரமாகத் திரட்டுகின்றனர்.

மேற்படி இடங்களில் உள்ள வீடுகள் , நிறுவனங்களுக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பொலிஸார், குடும்ப விவரங்களைச் சேகரித்தமை குறிப்பிடத்தக்கது.