கோட்டாபய வட,கிழக்கு இளைஞர் யுவதிகளிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

அரசியல் நோக்கங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தங்களுடன் இணைந்து ஒரே நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்வதற்காக கைகோர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வட,கிழக்கு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பு - தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தங்களிடம் நிலையான தீர்வு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் அனைத்து அபிவிருத்திப் பணிகளும், வடக்கு, கிழக்கிற்கும் வழங்கப்படும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.

நாட்டிற்கு பாதுகாப்பு என்பது எந்தளவு முக்கியமானது என்பதை குறித்து நாட்டின் ஆட்சியாளருக்கு போதிய அறிவு இருக்க வேண்டும்.

இந்த நிலையில், நாட்டின் புலனாய்வுத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பதங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஊடக சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு வெளியிடும் சுதந்திரம் என்பன தங்களின் கீழ் இல்லாதுபோய்விடுமா என்ற அச்சம் உள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறதே என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துள்ள அவர், தங்களது அரசாங்கத்தின் கீழ் தாங்கள் எப்போதும், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிப்பதாகவும், ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.