யாழ் பிரதேச வைத்திய சாலையில் நடந்த பயங்கரம்! பொலிசார் அசமந்தம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாள்வெட்டால் காயமடைந்தவர் அட்டகாசம்!

சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று வாள்வெட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வைத்தியசாலையில் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டபோதும், பொலிசார் அசட்டையாக இருந்து அவர்களை தப்பிக்க அனுமதித்ததாக குற்றம்சுமத்தப்படுகிறது.

நேற்று (24) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

வரணி பகுதியில் இடம்பெற்ற மது விருந்தில் ஏற்பட்ட மோதலில் வாள்வெட்டிற்கு இலக்கான சிதம்பரநாதன் சிவராசா (23) என்பவர் நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை ரமேஷ் என்பவரே வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார்.

இருவரும் மதுபோதையில் வைத்தியசாலைக்கு வந்தனர். அங்கிருந்த வைத்திர், தாதியர்கள், சிற்றூழியர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, அங்கு வந்த பொலிசார் இருவரையும் விசாரணை நடத்தியிருந்தனர்.

வாள்வெட்டு சம்பவத்தால் காயம் ஏற்படவில்லை, விபத்தாலேயே காயம் ஏற்பட்டதாக அவர்கள் சம்பவத்தை குறிப்பிட முயன்றதை வைத்தியசாலை நிர்வாகம் ஏற்கவில்லையென்பதையடுத்தே அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

வாள்வெட்டிற்கு இலக்கானவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டுமென வைத்தியர்கள் குறிப்பிட்டதையடுத்து, விடுதியிலிருந்து அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

வைத்தியசாலைக்குள் அட்டகாசம் செய்தவர்களை, பொலிசாரிடம் ஒப்படைத்த பின்னரும் அவர்கள் தப்பிச் சென்றது வைத்தியசாலை வட்டாரங்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.