கோட்டாவை தெரிவு செய்தது மஹிந்த அல்லவாம்

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பொதுமக்களே தெரிவு செய்தார்கள் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதியாகி, அதற்குரிய பணிகளைச் செய்யக்கூடியவருக்கான அனைத்துத் தகுதிகளும் கோட்டாபயவுக்கு உண்டு.

இது, நான் தனியாக எடுத்த முடிவல்ல. பொதுமக்களே அவரைத் தெரிவு செய்தனர். அதனால், மக்களுக்குத் தேவையானவரைத்தான் நாங்கள் முன்மொழிய வேண்டும்.

தவிர, எங்களுக்குத் தேவையானவரை நியமிக்க முடியாது. மக்கள் கோட்டாவைக் கோரினால், கோட்டாவுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

வேறு ஒருவரைத்தான் மக்கள் கோருவார்களாயின், அவருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், கோட்டாபயதான் மக்கள் தெரிவாக இருக்கிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.