கொழும்பில் இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில்...எதற்கு தெரியுமா?

கொழும்பு மாநகரத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் இங்குறுகடை சந்தியிலிருந்து காலிமுகத்திடல் வரையிலான நான்கு பாதைகளைக் கொண்ட மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பு துறைமுகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு மாநகரில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக காலதாமதம், வளி மாசடைவு, எரிபொருள் விரயம் உள்ளிட்ட பல்வேறு தனிநபர் மற்றும் சூழலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதுமாத்திரமன்றி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெருமளவான நட்டம் ஏற்படுகின்றது.

எனவே கொழும்பு மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடியவாறான வீதிப்பொறிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிரதான வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக கொழும்பு நகரை நோக்கிய வீதி இணைப்பும் நெரிசலை எதிர்கொள்கின்றது.

அதேபோன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகப் பயணிப்போரும் களனிப் பாலத்திலிருந்து இதேவகையான போக்குவரத்து நெரிசலையே எதிர்கொள்கின்றனர்.

எனவே களனிப்பாலத்திலிருந்து பொருளாதார நிர்வாக கேந்திர நிலையமாக விளங்கும் கொழும்பு நகரை நோக்கி காத்திரமான போக்குவரத்து வழிமுறையொன்று நிறுவப்பட வேண்டும்.

அதன்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, களனியிலிருந்து கொழும்பை நோக்கி துறைமுக வளாகத்தினூடான மேம்பால நெடுஞ்சாலை சிறந்த தீர்வான அமையுமென இனங்காணப்பட்டது.

அதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் இந்த மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இங்குறுகடை சந்தியிலிருந்து காலிமுகத்திடல் வரையிலான நான்கு பாதைகளைக் கொண்ட 5.3 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட மேம்பாலத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்கே நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியை வழங்கும் அதேவேளை சீனா சிவில் என்ஜினியரிங் கொன்ஸ்ரக்ஷன் கோப்பரேஷன் உள்ளிட்ட மூன்று சீன நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியாண்மையின் அடிப்படையில் மேம்பால நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

மூன்றுவருட காலத்திற்குள் இந்த மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணத்தை முன்னெடுக்கவுள்ள சீன நிறுவங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.