பிக்பாஸ் லொஸ்லியா - கவின் காதல் தொடர்பில் வெளியான முதல் பகீர் தகவல்

பிக்பாஸ் வீட்டில் வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே என்றும், லொஸ்லியா- கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே ஏன் எதிர்க்கிறீர்கள் என்றும் இயக்குநர் வசந்த பாலன் பதிந்துள்ள பகீர் கருத்து சமூக வலைத்தளங்களில் தீயாக பரவுகிறது...

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மீண்டும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.

இதில் போட்டியாளராக கலந்து கொள்ளும் லொஸ்லியா என்பவர் பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது அப்பாவை பிக்பாஸ் இல்லத்தில் சந்தித்திருக்கிறார். அப்போது அவரது அப்பாவின் கடுமையான வார்த்தைகள் காரணமாக ஒரு விவாதம் வெடித்திருக்கிறது.

லொஸ்லியாவை தேற்றிவிட்டு சக போட்டியாளர்கள் முன்னிலையிலேயே குமுறிய மரியநேசன், "என்னிடம் என்ன சொல்லி நீ வந்த, நான் உன்னை அப்படியா வளர்த்தேன், இதைப்பற்றி பேசக்கூடாது, நான் உன்னை அப்படி வளர்க்கவில்லை.

தலைகுனிஞ்சு வாழக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா, மற்றவங்க காறி துப்புறதை என்னை பாக்கவச்சிட்ட," என்று தழுதழுத்தார் மரியநேசன்.

மரியநேசனை சமாதானப்படுத்தினார் இயக்குநர் சேரன். லொஸ்லியா தந்தை ஆதங்கப்பட்டதை பார்த்து ஓரமாக அமைதியாக நின்றிருந்தார் கவின், குற்ற உணர்ச்சியில் வீட்டுக்குள் சென்ற கவின் ஒருபக்கம் அழத் தொடங்கினார்.

மரியநேசனின் செயல் குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.

அதில், கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்து கொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணமும் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்க்கையில், எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதலாக இருந்தது.

ஆனால், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லொஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே "லொஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?

கேமை கவனித்து விளையாடுங்க" என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.

இயக்குநர் வசந்த பாலன்

இன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

"வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே? என்று லொஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்ட வண்ணம் இருந்தார்கள். லொஸ்லியா செய்வதறியாது தவித்தாள்.

எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள். லொஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.

அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.

ஆக, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகதான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய?

அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்! என்று அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால், என்னைப் பொருத்தவரை உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும். வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே?

காதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல்தான் மனதில் ஒலிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

- BBC - Tamil