நீராவியடி விகாரையின் பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

முல்லைத்தீவில், புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், பிக்குவின் சமாதியை அமைப்பதற்கு தடை விதித்து நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தார்.

அவருடைய உடலை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்று நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில், இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

தகவலின் பிரகாரம் நேற்றுமுன்தினம் இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பிள்ளையார் ஆலயத்தைச் சேர்த்தவர்கள், பௌத்த பிக்குவின் உடலை இந்து ஆலயத்திற்கு அருகில் தகனம் செய்வது இந்து மதத்தை அவமதிக்கும் செயற்பாடு எனவும் அதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியின்மை ஏற்பட சந்தர்பங்கள் உள்ளமையால், முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.

அதுதொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

நிரந்த நீதிவான் விடுப்பில் இருந்தமையால் பதில் நீதிவான், இன்று வரை பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் புதைக்கவோ, தகனம் செய்யவோ முடியாது என இடைக்காலக் கட்டளை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு நிரந்தர நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

இதன் பிரகாரம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளது.