ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் மக்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

குடும்பம் ஒன்றை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு பதிலாக நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதி ஒருவரையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஹொரணை, மொறகஹஹேன பிரதேசத்தில் இன்று (08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரவுள்ளதாகவும் இவ்வாறானவர்களே வரலாற்றில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர்கள் நாட்டுக்காக உழைக்காது தமது குடும்பத்துக்காக மாத்திரம் உழைப்பதாகவும் கூறினார்.

அவ்வாறானவர்களே இதுவரை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தனது கும்பத்திற்காக மாத்திரமே உழைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எனவே இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏன் வேட்பாளரை பெயரிடவில்லை என கேள்வி எழுப்பிய அவர் அந்த கட்சி தற்போது பலமிழந்துள்ளதாகவும் கூறினார்.

அதற்கு மஹிந்த தரப்பு தேர்தலில் களமிறங்கியுள்ளமையும் ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை எனவும் ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனால் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர் கமினியூஸ்ட்வாதி ஒருவரின் குணாம்சங்களுடன் நாட்டை வழிநடத்துவார் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.