ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கு சபாநாயகர் முக்கிய வேண்டுகோள்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது பிரசாரங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல் பாதுகாப்பு தொடர்பான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமது வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரப்பணிகளை ஆரம்பித்திருக்கின்றன.

இந்நிலையில் பிரசாரங்களுக்காக வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவதும், சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவதும் வழமையாக நடைபெறுகின்ற விடயங்களாகும்.

இந்நிலையிலேயே தேர்தல் பிரசாரங்களின்போது சூழல் பாதுகாப்பை முன்னிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்தொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி யாதெனின் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல்நேயக் கொள்கையொன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏனையோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகும் என்றுள்ளது.